Home மாவட்டங்கள் சென்னை நலம் ஏஐ செயலியில் மருந்து முன்பதிவு முறை

நலம் ஏஐ செயலியில் மருந்து முன்பதிவு முறை

சென்னை, நவ. 2-
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க, ‘நலம் ஏஐ’ செயலி மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகளை வாங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்வதற்கு முன்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் நோயாளிகளைக் கண்காணித்து, உடனடி நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான மருந்துகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. பொதுவாக காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பெரும்பாலான நோயாளிகள் மருந்து மாத்திரைகளை வாங்க வருவதால், அந்த நேரத்தில் கூட்டம் அதிகரித்து, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘நலம் ஏஐ’ என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் இந்தச் செயலியைப் பயன்படுத்தி, மாத்திரைகள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கான நேரத்தைத் தேர்வு செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம். இதனால் ஒரே நேரத்தில் அதிகமானோர் திரள்வதும், அதனால் ஏற்படும் தாமதங்களும் தவிர்க்கப்படும்.