Home செய்திகள் தேசிய செய்திகள் காங்கிரஸ் புகைப்படம் போலி: கிரண் ரிஜிஜு

காங்கிரஸ் புகைப்படம் போலி: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி, நவ. 2-
டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் பகிர்ந்த புகைப்படம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலிப் படம் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் எம்.பி. ஜெகதீஷ் தாகூர் உள்ளிட்ட ஆதரவாளர்கள், ராம்லீலா மைதானக் கூட்டப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இதைச் சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கிரண் ரிஜிஜு, “ராம்லீலா மைதானம் கூட்டத்தால் நிரம்பி வழிவது போலக் காட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் போலிப் பிரச்சாரக் குழு உருவாக்கியுள்ள ஏஐ புகைப்படம் கூட ஒழுங்காகச் செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வெளியிட்ட குறிப்பிட்ட புகைப்படத்தில் மேடையில் இருந்த ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் தோற்றங்கள் அசல் மேடை அமைப்பிலிருந்து மாறுபட்டிருப்பதாகவும், அது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகத் தெரிவதாகவும் சமூக வலைதளப் பயனர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, கூட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் கூறியிருந்ததாகவும், ஆனால் மைதானத்தின் 40 சதவீதப் பகுதிகள் காலியாக இருந்ததாகவும் பாஜக செய்தித் தொடர்பாளரும் எம்.பி.யுமான சம்பித் பத்ரா தெரிவித்தார். இது தோல்வியடைந்த கூட்டம் என்றும், புகைப்பட வித்தைகளால் யாரும் பிரதமராக முடியாது என்றும் அவர் கூறினார். காலி நாற்காலிகள் காணப்படும் காணொலிகளையும் பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு மறுப்புத் தெரிவித்த காங்கிரஸ், லட்சக்கணக்கானோர் பங்கேற்றதை காட்டும் ட்ரோன் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது. கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது தேர்தல் “வாக்குத் திருட்டு” மூலம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், ஞானேஷ் குமார் இல்லையெனில் நரேந்திர மோடி பிரதமராகவும், அமித்ஷா உள்துறை அமைச்சராகவும் ஆகியிருக்க முடியாது என்றும், அவர் சிறைக்குச் செல்வார் என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த சம்பித் பத்ரா, தேர்தல் சட்டவிரோதமானது என்றால் உடனடியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டியதுதானே என்றும், அந்த மனு எங்கே எனக் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்துக்கும் பாஜகவுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை இரு தரப்பும் மறுத்து வருகின்றன.