
சென்னை, நவ. 2-
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா நேற்று நடைபெற்றது. நவம்பர் 1-ந்தேதி கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளையொட்டி நடைபெற்ற இந்த விழாவில், எல்லைக்காவலர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுகையில், “தமிழ்நாடு நாளுக்கு அரசு விடுமுறை வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கூறினார். இந்த முறை தமிழ்நாடு தினம் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல்-அமைச்சர் விஜய் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்” என்றார். விழாவின்போது எல்லைக்காவலர்களுக்கான உதவித்தொகை உயர்வுக்கான அரசாணை வழங்கப்பட்டது. மேலும், தமிழறிஞர்கள் 5 பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கியதற்கான நூல் உரிமைத்தொகையும் வழங்கப்பட்டது. மூளை நரம்பியத்துறை பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. அலீம் உள்ளிட்டோருக்கு தமிழ்ச்செம்மல் விருது மற்றும் குறள் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. விழாவில் அமைச்சர் ஆனந்த், ‘திருக்குறள் பல்கலைக்கழகம்’ ஒன்றை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தமிழ்வழிக் கல்வி முறையில் தமிழை ஒரு பாடமாக கல்வித்துறை அமைச்சர் கட்டாயப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல், தமிழுக்கான தனிக் கொடியை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.















