Home செய்திகள் தேசிய செய்திகள் வாட்ஸ்-அப் மூலம் பி.எப். பேலன்ஸ் பார்க்கலாம்

வாட்ஸ்-அப் மூலம் பி.எப். பேலன்ஸ் பார்க்கலாம்

புதுடெல்லி, நவ. 2-
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பி.எப். சந்தாதாரர்களின் வசதிக்காக புதிய வாட்ஸ்-அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம்,
அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் செல்லாமல், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து வாட்ஸ்-அப் வழியாக பி.எப். கணக்கின் இருப்புத் தொகை, பாஸ்புக் விவரங்கள் மற்றும் கடைசியாக நடைபெற்ற 5 பணம் செலுத்தல் அல்லது எடுத்தல் பரிவர்த்தனைகளைத் தெரிந்துகொள்ளலாம்.மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற EPFO-வின் 74-வது நிறுவன நாள் கொண்டாட்டத்தின்போது இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார். மேலும், நீண்டகாலமாகச் செயல்படாமல் இருக்கும் பி.எப். கணக்குகளில் உள்ள பணத்தைப் பெறுவதற்கும் எளிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய அல்லது செயல்படாத கணக்குகளில் ரூ.1,000 வரை இருப்புத் தொகை வைத்திருப்பவர்கள், அதைப் பெறுவதற்குத் தனியாக விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. சந்தாதாரரின் அடையாளமும் வங்கிக் கணக்கு விவரங்களும் சரிபார்க்கப்பட்டிருந்தால், EPFO அந்தத் தொகையைத் தானாகவே சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றும். இதன்மூலம் சுமார் ஒரு லட்சம் செயல்படாத கணக்குகளுக்குத் தீர்வு காணப்பட உள்ளது. இக்கணக்குகளில் சுமார் ரூ.5 கோடி உரிமை கோரப்படாத தொகையாக உள்ளது. EPFO தற்போது 8 கோடிக்கும் அதிகமான செயலில் உள்ள உறுப்பினர்களின் நம்பிக்கையுடன், சுமார் ரூ.32 லட்சம் கோடி மதிப்பிலான நிதியை நிர்வகித்து வருவதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேவைகளை மேம்படுத்தவும், நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்கி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.வாட்ஸ்-அப்பில் இருப்புத் தொகையைப் பார்க்க, பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து +91 87964 41800 என்ற எண்ணுக்கு ‘Hi’ என அனுப்ப வேண்டும். பின்னர் மொழியைத் தேர்வு செய்து, இருப்புத் தொகைக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு வரும் ஓடிபியைப் பதிவு செய்ததும் விவரங்கள் காட்டப்படும்.
இதே வழியில் பாஸ்புக் பதிவிறக்கம் மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகளையும் அறியலாம்.