
புதுடெல்லி: நவ. 2-
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் நேற்று பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று மதியம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் திறந்த வேனில் கன்னாட்பிளேஸில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். பின்னர் ராம்லீலா மைதானத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்தனர்.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பாதுகாக்க முயற்சி செய்கிறார். ஆனால் ஞானேஷ் குமார் பதுங்கு குழியில் இருந்தாலும் இந்திய இளைஞர்கள் அவரை கண்டுபிடிப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை அகற்ற வேண்டும். வாக்கு திருட்டை தடுத்து ஜனநாயகத்தைக் காப்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, “உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இன்ஜின் அரசு, இரட்டை தோல்வியை சந்திக்கும். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி உத்தர பிரதேசத்தில் வெற்றி பெறலாம் என்று பாஜக கனவு காண்கிறது. அந்த கனவு பலிக்காது” என்றார். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசும்போது, “மேற்குவங்க தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். ஞானேஷ் குமார் மேற்குவங்கத்தில் வாக்குத் திருட்டில் ஈடுபட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்தார்.













