Home செய்திகள் தேசிய செய்திகள் 40 சொகுசு வீடுகள் – ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியிடம் தீவிர விசாரணை

40 சொகுசு வீடுகள் – ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியிடம் தீவிர விசாரணை

ஜெய்ப்பூர்: நவ. 2-
ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் 40 சொகுசு வீடுகளை வாங்கி உள்​ளனர். இந்த வீடுகள் மூலம் அவர்​களுக்கு ஓராண்​டில் ரூ.1.8 கோடி வாடகை கிடைக்​கிறது. இது​தொடர்​பாக இரு​வரிடமும் ஊழல் தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதி​காரி ஷிகர் அகர்​வால் (56). அவரது மனைவி பிரஷாகா மாத்​தூர் (57). இவர் அந்த மாநிலத்​தின் மூத்த ஐபிஎஸ் அதி​காரியாக உள்​ளார். இரு​வரும் ராஜஸ்​தான் அரசில் மிக முக்​கிய பொறுப்​பு​களை வகித்து உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரையி​லான காலத்​தில் கணவன், மனைவி இரு​வரும் உதய்​பூர், ஆல்​வார் பகுதி​களில் ரூ.6.16 கோடி மதிப்​பில் 40 சொகுசு விடுதி​களை வாங்கி உள்​ளனர்.
ராஜஸ்தானின் உதய்​பூர், ஆல்​வாரில் பழங்​கால அரண்​மனைகள் உள்​ளன. இவற்​றைப் பார்​வை​யிட உல​கம் முழு​வதும் இருந்து ஆண்​டுதோறும் லட்​சக்​கணக்​கான சுற்​றுலாப் பயணிகள் வருகை தரு​கின்​றனர். இதன் காரண​மாக 40 சொகுசு வீடுகளை​யும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்​ப​தி​யினர் வாடகைக்கு விட்டு உள்​ளனர். இதன்​மூலம் அவர்​களுக்கு ஓராண்​டில் ரூ.1.8 கோடி வரு​வாய் கிடைக்​கிறது. இந்த சொகுசு வீடுகள் தொடர்​பாக ஊடகங்​களில் அண்​மையில் செய்​தி​கள் வெளியானதைத் தொடர்ந்து இரு​வரும் கடந்த 29-ம் தேதி பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். ராஜஸ்தான் ஊழல் தடுப்​புப் பிரிவு போலீ​ஸார் இரு​வரிடமும் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இது​குறித்து போலீஸ் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ராஜஸ்தானை சேர்ந்த கோயல் பேஷன்ஸ் நிறு​வனத்​திடம் இருந்து கடந்த சில ஆண்​டுகளில் ஐஏஎஸ் அதி​காரி ஷிகர் அகர்​வால், ஐபிஎஸ் அதிகாரி பிரஷாகா மாத்​தூர் தம்​பதி 40 சொகுசு வில்​லாக்​களை வாங்கி உள்​ளனர். பின்​னர் அதே நிறு​வனத்​துக்கு 40 வீடுகளை​யும் குத்​தகைக்கு விட்டு உள்​ளனர். அந்த நிறு​வனம் சார்​பில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதிக்கு மாதம் ரூ.1.8 கோடி வாடகை பணம் வழங்கப்படு​கிறது.
நாற்​பது சொகுசு வீடுகளும் கணவன், மனைவி மற்​றும் இரு மகன்களின் பெயர்​களில் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன. வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.6.16 கோடி என்று பத்​திரப் பதிவுகளில் குறிப்​பிடப்​பட்டு உள்​ளன. ஆனால் அவற்​றின் மதிப்பு அதைவிட பல மடங்கு அதி​க​மாக இருக்​கும் என்று தெரி​கிறது. வீடுகளை விற்ற தனியார் நிறு​வனத்​துக்கு சாதக​மாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்​ப​தி​யினர் பல்​வேறு சலுகைகளை வழங்கி உள்​ளனர். குறிப்​பாக பல்​வேறு நிலங்​களின் வகைப்​பாடு மாற்​றப்​பட்டு இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் ஐஏஎஸ் அதி​காரி தனது சொத்து விவரப் பட்டியலை அரசிடம் தாக்​கல் செய்​தார். அதில் தனது பெயரில் 14 சொத்​துகள் இருப்​ப​தாக அவர் குறிப்​பிட்டு உள்​ளார். அவரது மனைவியும் ஐபிஎஸ் அதி​காரியுமான பிரஷாகா மாத்​தூர் தனது பெயரில் எந்த சொத்​தும் இல்லை என்று குறிப்​பிட்டு இருக்​கிறார். ஆனால் இரு​வரும் முக்​கிய சுற்​றுலா தலங்​களில் 40 சொகுசு வீடுகளை முறைகேடாக வாங்​கி​யிருப்​பது அம்​பலமாகி உள்​ளது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.