
பெங்களூரு, நவ. 2-
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயிலைத் தயாரிக்கும் பணி பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல் தொழிற்சாலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்பை – அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் வழித்தடத்திற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன:
- வேகம் மற்றும் கட்டமைப்பு: இந்த ரயில் மணிக்கு 280 கி.மீ சோதனை ஓட்ட வேகத்திற்கும், மணிக்கு 249 கி.மீ இயக்க வேகத்திற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த நீளம் 202 மீட்டராகும். இதில் 4 மோட்டார் கார்கள் மற்றும் 4 டிரெய்லர் கார்கள் என மொத்தம் 8 பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப இரண்டு 8 பெட்டி ரயில்களை இணைத்து 16 பெட்டிகளாகவும் இயக்க முடியும்.
- பயணிகள் அமரும் வசதி: இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 557 பயணிகள் பயணம் செய்ய முடியும். இதில் 7 சாதாரண வகுப்புப் பெட்டிகளும் (3×2 இருக்கை அமைப்பு), 1 எக்சிகியூட்டிவ் வகுப்புப் பெட்டியும் (2×2 இருக்கை அமைப்பு) இடம்பெற்றுள்ளன.
- உள்ளக வசதிகள் மற்றும் வடிவமைப்பு: இந்தியர்களின் உடல் அமைப்புக்கு ஏற்ப விசாலமான இருக்கைகள் மற்றும் கூடுதல் கால் நீட்டிப்பு இடவசதியுடன் இதன் உட்புறங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் பெட்டிகளுக்கு இடையே எளிதாக நடந்து செல்ல ஏதுவாக ஒற்றைத் துண்டால் ஆன சீல் செய்யப்பட்ட கேங்வே (Gangway) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து இருக்கைகளின் வரிசைகளிலும் பரந்த ஜன்னல்கள், நவீன எல்.இ.டி விளக்குகள், மடிக்கணினி மற்றும் கைபேசி சார்ஜ் செய்யும் வசதிகள், பெரிய லேக்கேஜ்களை வைக்க ஓவர்ஹெட் ரேக்குகள் மற்றும் தரையில் பொருத்தப்பட்ட பிரத்யேக ஸ்டாண்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள்: நடைமேடைக்குச் சமமான தரை அமைப்பு (Level boarding), ரயலுக்கும் நடைமேடைக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க தானியங்கி படிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக இருக்கைகள், சக்கர நாற்காலி இடங்கள் மற்றும் கழிப்பறைகள், மற்றும் பார்வையற்றோருக்காக பிரெய்லி (Braille) பலகைகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.
- தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு: பயணிகளுக்கு உடனுக்குடன் விபரங்களை வழங்க ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் LCD திரைகள் மற்றும் தானியங்கி அறிவிப்பு அமைப்புகள் உள்ளன. பயணிகள் அவசர காலங்களில் ரயிலின் பணியாளர்களைத் தொடர்பு கொள்ள எமர்ஜென்சி டாக்-பேக் யூனிட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பயணத்தின்போது இணையம் மூலம் பொழுதுபோக்குகளைப் பெற அதிவேக வைஃபை வசதியும் உள்ளது.
- சத்தத்தைக் குறைக்கும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு: காற்றியக்கவியல் (Aerodynamic) முறையில் உருவாக்கப்பட்டுள்ள இதன் மூக்குப்பகுதி மற்றும் உடல் அமைப்பு காற்றுத் தடையைக் குறைத்து, சுரங்கங்களில் செல்லும் போது ஏற்படும் அதிகப்படியான சத்தத்தைத் தவிர்க்கிறது. மேலும், பயோ-டைஜஸ்டர் கழிப்பறைகள், பெட்டிகளின் சுவர்கள் மற்றும் தரைகளில் சத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஒலிகாப்புப் பூச்சுகள், ஆண்டு முழுவதும் சீரான தட்பவெப்பநிலையை வழங்க டூயல்-யூனிட் அமைப்பு மற்றும் ரயிலின் வேகத்தைக் குறைக்கும் போது மின்சாரத்தை மீட்டு மின்சாரக் கட்டமைப்புக்கே அனுப்பும் ஸ்மார்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (Regenerative braking) தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.













