
சித்ரதுர்கா, நவ. 4-
சிறுத்தை தாக்கியதில் 65 வயது விவசாயி பலியான சம்பவம் செல்லக்கெரே தாலுகா தொட்டசல்லூர் கிராம வெளிப்பகுதியில் நடந்துள்ளது.இறந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரப்பா (65) என அடையாளங் காணப்பட்டுள்ளார். இவர் வீட்டின் அருகில் இருந்தபோது நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் திடீரென பாய்ந்த சிறுத்தை, அவரை கொடூரமாக தாக்கியதில் ராமச்சந்திரப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவத்தால் தொட்டசல்லூர் கிராமத்தில் பெரும் பீதியும் பதற்றமும் நிலவுகிறது. கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையைப் பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













