
பெங்களூரு, நவ. 4-
ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் எம்.எம். சோமையா வீட்டில் துணிகரக் கொள்ளை நடந்துள்ளது.
பெங்களூரு இந்திரா நகர் அருகே உள்ள நியூ திப்பசந்திரா பகுதியில் வசித்து வரும் 67 வயதான எம்.எம். சோமையா, கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி குடும்பத்துடன் குடகு பகுதிக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், அக்டோபர் 28 காலை 7:15 மணிக்கு அவரது வீட்டின் கதவு திறந்திருப்பதை அருகில் வசிக்கும் நாராயண் பார்த்து சோமையாவிற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பரிசீலித்தபோது, அக்டோபர் 28 அதிகாலை 2:34 மணிக்கு நீலம் மற்றும் சிவப்பு நிறச் சட்டை அணிந்த இரு நபர் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதுகுறித்து சோமையா அளித்த புகாரின் பேரில் இந்திரா நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம், 1982 புதுடெல்லி ஆசிய விளையாட்டு வெள்ளிப் பதக்கம், 1986 சியோல் ஆசிய விளையாட்டு வெண்கலப் பதக்கம், 1982 ஆம்ஸ்டர்டாம் சாம்பியன்ஸ் டிராபி வெண்கலப் பதக்கம் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க பதக்கங்களும், 8 கிராம் தங்க நாணயம், 10 கிராம் தங்கப் பொருள், தலா 200 கிராம் எடையுள்ள 6 வெள்ளி கரண்டிகள், தலா 72 கிராம் எடையுள்ள 2 வெள்ளி கோப்பைகள், 80 கிராம் வெள்ளி பாத்திரம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அடங்கும்.
நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த வீரரின் விளையாட்டு வாழ்க்கையின் அரிய நினைவுகளான பதக்கங்களே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட கிழக்கு மண்டல காவல் ஆணையர் டாக்டர் விக்ரம் அமடே, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.













