
வாஷிங்டன்: நவ. 4-
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் அதிபர் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி செனட் சபையை இழந்துள்ளது.
அமெரிக்காவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நவம்பர் 3 நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.இந்திய நேரப்படி இன்று (நவ.4) அதிகாலை முதலே முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில், அதிபர் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 மக்களவை இடங்களுக்கும், 100 செனட் இடங்களில் 35 இடங்களுக்கும், 36 மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் தேர்ந்தெடுக்கவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, பிரதிநிதிகள் சபை எனப்படும் மக்களவையில் 435 இடங்களில் ஜனநாயகக் கட்சி 181 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. செனட் சபையில் 51 இடங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி வசம் இப்போது 39 இடங்கள் மட்டுமே உள்ளன.
இந்தத் தேர்தலில் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனினும் இந்த இடைக்காலத் தேர்தல் முடிவுகள் ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இந்த முடிவுகள் ஆட்சியின் எஞ்சிய காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
அமெரிக்க செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியதன் மூலம், அரசின் திட்டங்கள், நிர்வாக முடிவுகள், அரசின் செலவினங்கள் ஆகியவற்றை ட்ரம்ப் இனி தன்னிச்சையாக செய்ய முடியாது. அவற்றை எதிர்க்கவும் கண்காணிக்கவும் ஜனநாயகக் கட்சியால் முடியும். அதுமட்டுமல்லாது அதிபரின் முக்கிய நியமனங்களுக்கு ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.ட்ரம்ப் அதிபரான பின்னர், தீவிர வரி விதிப்புகள் (Tariffs) மற்றும் ஈரானுடனான போர் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. இது வாக்குப்பதிவில் பிரதிபலித்திருக்கிறது என்று நிபுணர்கள், ஊடகங்கள் கூறுகின்றன.
ஆனால் இடைக்கால தேர்தல் முடிவுகள் தனக்கு சாதகமாக அமையாவிட்டாலும் அதிகாரம் தனக்கே என்று அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால் குடியரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.” என்று கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபருக்கு என சில வீட்டோ (veto) அதிகாரங்கள் உண்டு. அதைப்பயன்படுத்தி அவர் சில முடிவுகளை எடுக்க முடியும். அதனைக் கருத்தில் கொண்டே அதிபர் ட்ரம்ப் இவ்வாறாகப் பதிவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.













