
பெங்களூரு, நவ. 4-
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிரான ஸ்டிங் ஆபரேஷன் வழக்கின் விசாரணையை சிசிபி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்திகரமான தகவல்கள் கிடைக்காததால், தொழில் நுட்ப ரீதியிலான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமியின் டெல்லி இல்லத்திற்கு அருகே, இந்த வழக்கு தொடர்பான செல்போன்களை குற்றவாளிகள் ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டனர் என்று ரிதேஷ் பாண்டே அளித்த தகவல் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங்கும் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜரான குமாரசாமியின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரஜ்வல் பிரசாத், ஸ்டிங் வீடியோ உட்பட வழக்கு தொடர்பான பல முக்கிய விஷயங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது வாக்குமூலத்தை மட்டும் நம்பாமல், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப சான்றுகள் மூலம் உண்மையை கண்டறிய சிசிபி முடிவு செய்துள்ளது.
சிசிபி விசாரணையின் போது, ஸ்டிங் வீடியோ குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது, சமூக வலைதளங்களில் மட்டுமே அந்த வீடியோவை பார்த்தேன், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பிரஜ்வல் பிரசாத் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரிதேஷ் பாண்டே என்ற நபரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. அவரது இந்த வாக்குமூலத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
செல்போன் ஆய்வு:
பிரஜ்வல் பிரசாத்தின் செல்போனை பறிமுதல் செய்து, அதில் உள்ள தகவல்களை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. வழக்கு தொடர்பான தொலைபேசி தொடர்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இதர டிஜிட்டல் தகவல்களை பரிசீலிப்பதன் மூலம் விசாரணைக்கு தேவையான முக்கிய தடயங்களை பெற சிசிபி திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கின் சில குற்றவாளிகளின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவற்றை தடயவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பி வைத்துள்ளனர். அந்த அறிக்கையை விரைவாக பெறுமாறு விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் சேகரிப்பு:
விசாரணையின் போது ரிதேஷ் பாண்டே டெல்லியில் செல்போன் வாங்கியது தொடர்பான தகவல் சிசிபிக்கு கிடைத்தது. இதையடுத்து செல்போன் வாங்கிய கடையின் சிசிடிவி காட்சிகள் மற்றும் ரசீதை போலீசார் சேகரித்துள்ளனர்.
இதுதவிர, அந்த செல்போன் கடைக்கு சுற்றியுள்ள பிற கடைகளின் சிசிடிவி காட்சிகளையும் பெற்று ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் செல்போன் வாங்கியது மற்றும் அதை பயன்படுத்தியது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த விசாரணை குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரிதேஷ் பாண்டே மற்றும் வினோத் சர்மா ஆகிய இருவரும் டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் எச்.டி.குமாரசாமியின் இல்லத்திற்கு சென்று வந்ததாக சிசிபிக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதன் பின்னணியில் அவரது இல்லத்தின் சிசிடிவி காட்சிகளை பெறுவது மற்றும் தேவைப்பட்டால் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்துவது குறித்தும் உயர் அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.
நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் சிசிபி மற்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது வழக்கு தொடர்பான தொழில்நுட்ப ஆதாரங்களை திரட்டுவது மற்றும் அடுத்தகட்ட விசாரணை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் தெளிவான தகவல்கள் கிடைக்காததால், அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடைக்கக்கூடிய டிஜிட்டல் மற்றும் இதர ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து விசாரணையை தொடருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணையில் எந்த தாமதமும் ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது













