
வாஷிங்டன், நவ. 5-
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றுள்ளது.
இந்த முடிவு, அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் 100 இடங்களைக் கொண்ட செனட் சபை, 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளைக் கொண்டது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்றாலும், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிறைவடையும். இதனால், அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் நடுவில் நடைபெறும் தேர்தல் ‘இடைக்காலத் தேர்தல்’ எனப்படுகிறது. இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில், 10 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவைப்படும் நிலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 367 இடங்களில் ஜனநாயகக் கட்சி 228 இடங்களையும், ஆளும் குடியரசு கட்சி 139 இடங்களையும் கைப்பற்றின.
செனட் தேர்தல் நடைபெற்ற 35 இடங்களில், முடிவு அறிவிக்கப்பட்ட 33 தொகுதிகளில் ஜனநாயகக் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் செனட்டில் அக்கட்சியின் பலம் 54 ஆக உயர்ந்து பெரும்பான்மை கிடைத்தது. 36 மாகாணங்களுக்கான ஆளுநர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி 22 மாகாணங்களிலும், குடியரசு கட்சி 12 மாகாணங்களிலும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக ட்ரம்ப் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியினருக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அவர்கள் கொண்டுவரும் சட்டங்களை நிராகரிக்கும் ‘வீட்டோ’ அதிகாரம் தமக்கு இருப்பதாகவும், ஈரான் போரும் முடிவுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார். தனது பெயர் வாக்குச்சீட்டில் இருந்திருந்தால் அமோக வெற்றி கிடைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.













