
ஈரான்: நவ. 5-
அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகளில் கச்சா எண்ணெய் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியக் கப்பல்களுக்கு ஹார்முஸ் வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.
ஈரான் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகத்தம் கூறுகையில், போர் பதற்றத்துக்கு மத்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, இந்தியா, சீனா, ஈராக், கத்தார் ஆகிய நான்கு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இந்தக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்றும், அமெரிக்கப் படைகள் அவற்றை இடைமறித்து தாக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். எனினும், இந்தியக் கப்பல்கள் கட்டணமின்றி ஹார்முஸ் வழியாகச் செல்ல முடியாது என்றும், ஈரானுக்கு போக்குவரத்துக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கத்தார் நாட்டுக்குச் சொந்தமான கப்பல்கள் எந்தக் கட்டணமும் இன்றி செல்ல அனுமதிக்கப்படுகின்றன. போர் காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. உலக நாடுகளிலிருந்து அத்தியாவசிய மருந்துகள்கூட ஈரானுக்கு வராத நிலையில், மருத்துவத் துறை மற்றும் மருந்து உற்பத்தியில் முன்னிலையில் உள்ள இந்தியாவிடமிருந்து மருந்துகள், மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியக் கப்பல்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வர்த்தகம் மற்றும் எரிசக்தித் துறைகளில் முக்கிய கூட்டாளியான சீனாவிடமிருந்து ராஜதந்திர ஆதரவைப் பெறும் நோக்கிலும், சீனக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஹார்முஸ் வழியாக சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சர்வதேச வணிகக் கப்பல்கள் குறிவைக்கப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்ததுடன், தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, சர்வதேச நீர்வழிகளில் கப்பல்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் செல்லும் நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.













