Home மாவட்டங்கள் சென்னை தீபாவளி, கார்த்திகை தீபம் முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தீபாவளி, கார்த்திகை தீபம் முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

திருத்தணி: நவ. 5-
தீபாவளி மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பாரம்பரிய களிமண் அகல் விளக்குகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் வரும் 8ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி கார்த்திகை தீபம் வருகிறது. இதனையொட்டி, வீடுகளில் மற்றும் கடைகள், கோயில்களில் பெண்கள் தீபம் ஏறறி வழிபடுவது வழக்கம். அறிவியல் அசுர வளர்ச்சியால் களிமண்ணால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த அகல் விளக்குகள் இடத்தில் இன்று விதவிதமான தீபங்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் களிமண் அகல் விளக்குகளுக்கு மவுசு குறைந்துள்ளது. இருப்பினும் கிராமங்களில் இன்றும் பெரும்பாலான பெண்கள் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி தீபாவளி மற்றும் கார்த்திகை தீபம் கொண்டாடி வருகின்றனர். நாகரீக உலகில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் நமது பாரம்பரிய முறைப்படி அகல் விளக்குகளால் வீடுகளில் தீபங்கள் ஏற்றி தீப திருநாள் மற்றும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை சூரிய நகரம், புச்சிரெட்டிப்பள்ளி, சிங்கசமுத்திரம், விடியங்காடு புதூர் மேடு, பொதட்டூர்பேட்டை, மேல் பொதட்டூர், குமாராஜபேட்டை, குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிப்பு பணியில் கடந்த சில நாட்களாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.