
பெங்களூரு, நவ. 7-
கர்நாடகத்தில் விற்பனை செய்யப்படும் இ20 பெட்ரோலில் 31.2 சதவீதம் வரை எத்தனால் கலந்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதாக, அந்த மாநில உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும், வெவ்வேறு எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த எரிபொருள் நிலையங்களில் இருந்து அளவியல் பிரிவு அதிகாரிகள் 63 பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். பெங்களூரு, கோலார், சிக்கபல்லாபுரா, துமகூரு, உத்தர கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் எத்தனால் கலப்பு விகிதம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்ததாகவும், அதிகபட்சமாக 31.2 சதவீதம் வரை பதிவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெட்ரோல் விற்பனை செய்த எண்ணெய் நிறுவனங்களிடம் முதலில் விளக்கம் கோரப்பட்டது. பின்னர் மாதிரிகள் ஐ.ஓ.சி.எல்., பி.பி.சி.எல். ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. அங்கு கிடைத்த ஆய்வு முடிவுகளில் எத்தனால் கலப்பு விகிதம் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை என்றும், இதனால் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததாகவும் துறை கூறியது. இதையடுத்து, ஐஎஸ்ஓ மற்றும் என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கு அதே மாதிரிகள் அனுப்பப்பட்டன. ஒரு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆறு முடிவுகளில், பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “அதிக எத்தனால் கலப்பு நுகர்வோரை பாதிக்கிறது. வாகனங்களின் மைலேஜ் குறைந்து, பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நுகர்வோருக்கும் மத்திய அரசு இ20 இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும். இதுகுறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்தார்.















