Home செய்திகள் தேசிய செய்திகள் நாகூர் தர்கா கந்தூரி விழா முன்னேற்பாடுகள் தொடக்கம்

நாகூர் தர்கா கந்தூரி விழா முன்னேற்பாடுகள் தொடக்கம்

நாகூர்: நவ.7-
நாகப்பட்டினம் நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-ஆம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு, தர்காவின் ஐந்து மினாராக்களிலும் பாரம்பரிய முறைப்படி பாய்மரம் ஏற்றும் முன்னோடி வைபவம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாகூர் ஆண்டவர் மறைந்து 469 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 470-வது ஆண்டு கந்தூரி பெருவிழா வரும் நவம்பர் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் தர்காவின் ஐந்து மினாராக்களிலும் திருவிழாக் கொடிகள் ஏற்றப்பட உள்ளன.
இதன் தொடக்க நிகழ்வாக மினாராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டது. தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்க, மங்கள வாத்திய இசையுடன் முதலில் சாஹிப் மினாராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது.
பின்னர் தஞ்சாவூர் மகாராஜாவால் கட்டப்பட்ட பெரிய மினாராவிலும், தொடர்ந்து மற்ற மினாராக்களிலும் முறைப்படி பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. நிகழ்ச்சியில் நாகூர் தர்கா ஆலோசனைக் குழுவினர், நாகை முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பாய்மரம் ஏற்றப்பட்ட பின்னர், கூடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் பாரம்பரிய மண் தட்டில் ‘தப்ரூக்’ எனப்படும் சீனி பிரசாதம் வழங்கப்பட்டது. ஜாதி, மத பேதமின்றி மும்மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ஆண்டவரைத் தரிசித்தனர்.
விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை, தர்கா தலைமை அறங்காவலர் நஜ்முதீன் சாஹிப் தலைமையில் அறங்காவலர் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் நவம்பர் 19-ஆம் தேதி நாகையிலிருந்து புறப்பட்டு நாகூர் வந்தடையும். தொடர்ந்து, நவம்பர் 20-ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவரின் புனித சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது.