
பியோங்யாங்: நவ. 7-
பிரபல கிரிப்டோகரன்சி நிறுவனமான பினான்ஸின் கணக்குகளில் இருந்து 6.3 பில்லியன் டாலர் மதிப்பிலான (ரூ.60,000 கோடி) கிரிப்டோ சொத்துகள் கடந்த வாரம் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டன. இந்தச் சம்பவத்துக்கு வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்களே காரணம் என்று கூறப்படுகிறது.கிரிப்டோகரன்சி திருட்டு உள்ளிட்ட இணையக் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்காக, வடகொரியா சிறார்களை இளம் வயதிலேயே தேர்வு செய்து பயிற்சி அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறமையான சிறுவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சைபர் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், பயிற்சி பெற்ற ஹேக்கர்களைக் கொண்ட படையை வடகொரியா உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு ரொக்கப்பணம், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இணையக் குற்றங்களில் வடகொரியா முக்கிய சக்தியாக உருவெடுக்க உதவியுள்ளதாகக் கூறப்படுகிறது. பினான்ஸ் நிறுவனமும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யும், ரூ.60,000 கோடி மதிப்பிலான இந்தத் திருட்டுக்கு வடகொரிய அரசைக் குற்றம்சாட்டியுள்ளன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வடகொரிய அரசு மறுத்துள்ளது.
வடகொரியாவின் சைபர் திட்டத்துக்காக திறமையான சிறுவர்கள், அவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தேர்வு செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது. கணினி அறிவியல் படிப்பதற்காக, 11 அல்லது 12 வயதிலேயே ஆண்டுதோறும் சுமார் 150 முதல் 200 திறமையான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் 17 வயதிலேயே நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்விக்காக அனுப்பப்படுவதாக, கிம் ஹியுங் குவாங் தெரிவித்துள்ளார்.
2004-ல் தென்கொரியாவுக்குத் தப்பிச் செல்லும் முன்பு, வடகொரிய அரசு ஹேக்கர்களுக்குப் பயிற்சி அளித்த பிரிவில் பணியாற்றியவர் கிம் ஹியுங் குவாங். “இந்த திறமையாளர்கள் வடகொரிய அதிபர் கிம் ஜாங் கின் ரகசிய ஆயுதங்களில் ஒன்றாகச் செயல்படுகின்றனர். இதுபோன்ற ஹேக்கர்களை வடகொரியாவைத் தவிர வேறு எந்த நாடும் உருவாக்குவதில்லை” என்று அவர் கூறினார்.














