
புதுடெல்லி: நவ. 12-
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, செயற்கை மழையைப் பெய்விக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதை எதிர்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மேகங்களைப் பயன்படுத்தி செயற்கை மழையை உருவாக்கி, காற்றில் உள்ள மாசுத் துகள்களின் அளவைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கிளவுட் சீடிங் எனப்படும் மேக விதைப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
இத்தொழில்நுட்பத்தில், மேகங்களுக்குள் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் தூவப்படுகின்றன. சில்வர் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு போன்ற வேதிப்பொருட்கள் மேகங்களில் செலுத்தப்படுவதன் மூலம் மழைத்துளிகள் அல்லது பனிப்படிகங்கள் உருவாகும் வகையில் வானிலையில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் மழை பெய்யச் செய்து, காற்றில் கலந்திருக்கும் மாசுத் துகள்களை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தநிலையில், ஐஐடி கானூர் தயாராகி வரும் கிளவுட் சீடிங் கருவிகள் பொருத்தப்பட்ட விமானம் மூலம் டெல்லியில் செயற்கை மழையைப் பெய்விக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த முயற்சியின் மூலம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இதுதொடர்பாக இரண்டு கட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு கட்டச் சோதனையின்போதும் சில்வர் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு கலந்த எட்டு வகையான வேதிப்பொருட்கள் மேகங்களுக்குள் செலுத்தப்பட்டன. எனினும், அந்தச் சோதனைகளின் மூலம் மழை பெய்யவில்லை. இருந்தபோதிலும், குறிப்பிட்ட இடங்களில் காற்றில் உள்ள மாசுபாட்டின் அளவைக் குறைக்க இந்த முயற்சி உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது













