Home மாவட்டங்கள் பெங்களூர் 7 பேர் கொலை வழக்கில் ரூ. 3 கோடி சொத்து ஆசை காட்டி மகளை சம்மதிக்க...

7 பேர் கொலை வழக்கில் ரூ. 3 கோடி சொத்து ஆசை காட்டி மகளை சம்மதிக்க வைத்த தந்தை

பெங்களூரு, நவ. 12-
பெங்களூரு ராஜாஜி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு ஆசை காட்டி தனது மகளையும் இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட தந்தை சம்மதிக்க வைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்ரீராம்புரத்தில் பாட்டியின் பெயரில் இருந்த சுமார் 3 முதல் 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீது முக்கிய குற்றவாளியான இந்துசேகர் கண் வைத்திருந்தார். மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உயிருடன் இருந்தால் சொத்தில் அவர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், அனைவரையும் கொலை செய்துவிட்டால் சொத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்றும் தனது மகளிடம் அவர் ஆசை வார்த்தை கூறி சம்மதிக்க வைத்துள்ளார். தந்தையின் பேச்சை நம்பிய மகளும் அவரது கொலைச் செயல்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார். 7 பேரும் கொலை செய்யப்பட்ட பிறகு அவர்களது உடல்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று வீசுவதிலும் மகள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கொலை செய்த பிறகு உடல்களை அப்புறப்படுத்தவும், தடயங்களை அழிக்கவும் 52 வயதான இந்துசேகர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். தனது மனைவி சுனிதா மற்றும் மாமியார் ரூபாவதி ஆகியோரைக் கொலை செய்த பிறகு, சாலையோரக் கடை ஒன்றில் மொத்தமாகப் படுக்கை விரிப்புகளை அவர் வாங்கியுள்ளார். பின்னர் 3 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி உடல்களைச் சுற்றி, பழைய துணிகளால் மூட்டையாகக் கட்டி ஒவ்வொரு உடலாகக் காரின் டிக்கியில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் சிவகுமார் மற்றும் சங்கர் ஆகியோரைக் கொலை செய்த பிறகு அவர்களது துணிகளாலேயே கை, கால்களைக் கட்டியுள்ளார். மேலும் நளினி, திவ்யா, ரூபாவதி மற்றும் சுனிதா ஆகியோரின் சேலைகளைப் பயன்படுத்தி உடல்களை மூட்டைகளாகக் கட்டியதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுப்பதற்காக ரசாயன திரவத்தையும் இந்துசேகர் பயன்படுத்தியுள்ளார். பின்னர் அந்த உடல்களை மலைப்பாதை பகுதிகளில் வீசிச் சென்றுள்ளார். கொலை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களில் 3 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. தற்போது குற்றவாளி இந்துசேகர் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் உள்ளனர். சொத்து விவகாரம் மட்டுமே இந்த 7 பேர் கொலைக்கு முக்கிய காரணமா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.