Home செய்திகள் தேசிய செய்திகள் கைப்பேசி முடக்கத்தில் தமிழ்நாடு 7-வது இடம்

கைப்பேசி முடக்கத்தில் தமிழ்நாடு 7-வது இடம்

புதுடெல்லி, நவ. 13- மத்திய தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத் தரவுகளின்படி, நடப்பு ஆண்டில் நாடு முழுவதும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 63.68 லட்சம் கைப்பேசிகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 39.34 லட்சம் கைப்பேசிகள் திருடப்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் என இரு வகைகளையும் மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சிஇஐஆர் (CEIR) அமைப்பு மூலம் முடக்க முடியும். எனவே, முடக்கப்பட்ட அனைத்து கைப்பேசிகளும் திருடப்பட்டவை என்று கருத முடியாது.
முடக்கப்பட்ட கைப்பேசிகளின் எண்ணிக்கையில் டெல்லி-என்சிஆர் 10,92,105-உடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 7,74,644 கைப்பேசிகளுடன் 2-வது இடத்திலும், கர்நாடகா 6,25,403-உடன் 3-வது இடத்திலும் உள்ளன. அடுத்ததாக உத்தரப் பிரதேசம் 5,93,830, தெலங்கானா 5,75,138, மேற்கு வங்கம் 3,10,564 கைப்பேசிகளுடன் இடம்பெற்றுள்ளன. 2,96,962 கைப்பேசிகள் முடக்கப்பட்ட தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. மத்தியப் பிரதேசம் 2,76,543, ஆந்திரா 2,47,444, குஜராத் 2,43,356, ராஜஸ்தான் 2,16,006 கைப்பேசிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
திருடப்பட்டும் காணாமல்போயும் மீட்கப்பட்ட கைப்பேசிகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமாக முடக்கப்பட்ட மாநிலங்களில் ஆந்திரா 58.14 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. குஜராத் 50.76 சதவீதம், உத்தரப் பிரதேசம் 50.19, கர்நாடகா 49.02, ராஜஸ்தான் 48.54, தெலங்கானா 44.85 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 43.42 சதவீதத்துடன் 7-வது இடத்திலும், டெல்லி 8.49 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன. காணாமல்போன அல்லது திருடப்பட்ட கைப்பேசிகள் குறித்த தடயங்கள் கிடைத்த பிறகும்,
காவல் துறையினரால் 37.69 சதவீத கைப்பேசிகளை மட்டுமே மீட்க முடிகிறது. கைப்பேசி திருடப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் ‘திருடப்பட்டது’ என்று பதிவு செய்யாமல், ‘தொலைந்துவிட்டது’ என்றே புகார் அளிக்கின்றனர். கைப்பேசிகளை மீட்கவும் திருடியவர்களைப் பிடிக்கவும் காவல் துறையினர் போதிய முயற்சி மேற்கொள்வதில்லை என்றும், அதற்கான செலவு கூடுதலாக இருப்பதால் அந்த முயற்சி கைவிடப்படுவதாகவும் கூறப்படுகிறது.