
மும்பை: நவ. 13-
புறநகர் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை எதிர்த்த இளம் பெண், ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்டதில் இடது கையை இழந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண், போரிவலியிலிருந்து விரார் நோக்கிச் சென்ற மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அதே பெட்டியில் இருந்த ஒரு நபர் அவரிடம் தொடர்ந்து தவறான முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண், தனது செருப்பை அந்த நபர் மீது வீசியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த பயணிகள் தலையிட முயன்றபோதும், அந்த நபர் பெண்ணை திட்டியபடி தனது செருப்பை அவர் மீது வீசியுள்ளார்.ரயில் நைகான் நிலையத்தை அடைந்தபோதும் வாக்குவாதம் தொடர்ந்தது. அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர், பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இரு பெட்டிகளுக்கு இடையிலான இடைவெளியில் விழுந்த பெண், மீண்டும் நடைமேடைக்கு ஏற முயன்றார். ஆனால், அதற்குள் ரயில் நகரத் தொடங்கியதால் அவரது இடது கை சக்கரங்களுக்கு இடையே சிக்கி துண்டானது. மேலும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் 16 தையல்கள் போடப்பட்டன.
சம்பவ இடத்தில் நிலவிய பதற்றத்தைப் பயன்படுத்தி தப்பிய நபரை, ரயில்வே காவல் துறையினர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண், “எனது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. எனக்கு கண்டிப்பாக நீதி வேண்டும்” என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சம்பவத்தில் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யவில்லை என பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, உரிய சட்டப்பிரிவுகள் விரைவாகச் சேர்க்கப்படும் என ரயில்வே காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.













