
பெங்களூரு, நவ. 13-
மாநிலத்தில் மது விற்பனை மூலம் அரசு கஜானாவுக்கு வரும் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ள போதிலும், தனிநபர் மது அருந்தும் அளவு குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மாநில அரசு அமல்படுத்தியுள்ள புதிய மது வரி கொள்கையின் எதிரொலியாக, மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் தனிநபர் சுத்தமான ஆல்கஹால் அருந்தும் அளவு 2.4 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் அரசின் கலால் வருவாய் 13.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கர்நாடகாவில் தனிநபர் சுத்தமான ஆல்கஹால் அருந்தும் அளவு 1.59 லிட்டராகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த அளவு 1.63 லிட்டராக இருந்தது. இதன் மூலம் 2.4 சதவீதம் சரிவு பதிவாகியுள்ளது.
கடந்த மே 11-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ள ஆல்கஹால் அளவு அடிப்படையிலான புதிய வரி கொள்கை, மது அருந்தும் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுபானத்தில் உள்ள ஆல்கஹால் அளவைப் பொறுத்து வரி விதிக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் குறைந்த ஆல்கஹால் கொண்ட பானங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மது அருந்தும் அளவு குறைந்திருந்தாலும், அரசின் கலால் வருவாயில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கர்நாடகாவின் கலால் வருவாய் 22 ஆயிரத்து 191 கோடியே 63 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 13.4 சதவீதம் அதிகமாகும்.
இதேவேளையில், மாநிலத்தில் மொத்த மது விற்பனை அளவு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பீர் மற்றும் ஒயின் விற்பனையின் பங்கு 36 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதிய வரி கொள்கையின் காரணமாக, சில குறைந்த விலை இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் உள்ள ஆல்கஹால் அளவை 42.8 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைத்துள்ளனர். கர்நாடகாவில் விற்பனை செய்யப்படும் இத்தகைய மதுபானங்களின் சராசரி ஆல்கஹால் அளவு 40.5 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.













