Home செய்திகள் உலக செய்திகள் வெளிநாட்டு மாணவர் விசா விதி ரத்து

வெளிநாட்டு மாணவர் விசா விதி ரத்து

வாஷிங்டன்: நவ. 17-
அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் விசா காலத்தைக் குறைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையை அமெரிக்க பெடரல் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு இந்திய மாணவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோருக்கு நிம்மதியை அளித்துள்ளது.
குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தங்கும் காலத்துக்கு டிரம்ப் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி, வெளிநாட்டு மாணவர்கள் தங்களது படிப்பு முடியும் வரை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், புதிய விதியின்படி, மாணவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே தங்க முடியும் என்றும், அதன்பிறகு விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதேபோல், 5 ஆண்டுகள் வரை தங்க அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் விசா காலம் 240 நாட்களாகவும், சீன பத்திரிகையாளர்களின் விசா காலம் 90 நாட்களாகவும் குறைக்கப்பட்டது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் இந்த முடிவை எதிர்த்து, அமெரிக்க பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டென்னிஸ் சேலர், டிரம்ப் அரசின் புதிய விசா கொள்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனது உத்தரவில், அரசின் புதிய கொள்கை தன்னிச்சையானது, அதிகார துஷ்பிரயோகம் கொண்டது, சட்டத்துக்கு புறம்பானது என்று நீதிபதி குறிப்பிட்டார். வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதையே சட்டமன்றம் ஊக்குவிக்க விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், பி.எச்.டி. போன்ற நீண்டகால ஆராய்ச்சிப் படிப்புகளைத் தடுக்கும் வகையிலும், மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் வகையிலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயல்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.அமெரிக்காவில் 1 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் உள்ளனர். செப்டம்பர் மாதம் இத்திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. foreign students, ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்களின் சட்டப் போராட்டத்துக்கு இது முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.