Home மாவட்டங்கள் சென்னை சூரசம்ஹார விழாவில் அரோகரா முழக்கம்: தலைவர்கள் கண்டனம்

சூரசம்ஹார விழாவில் அரோகரா முழக்கம்: தலைவர்கள் கண்டனம்

சென்னை: நவ. 17-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப்பெருமானுடன் தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரைப் போற்றியும் ‘அரோகரா’ என முழக்கமிட்டதாகக் கூறப்படும் நிகழ்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.விழாவை வர்ணனை செய்த தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி, அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும் பாடகருமான வேல்முருகன் ஆகியோர், முருகப்பெருமானுடன் முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கும் ‘அரோகரா’ என முழக்கமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட கண்டனத்தில், கந்தனின் திருப்புகழ் ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், ஆன்மிகப் புரிதல் அல்லது பற்றுதல் இல்லாதவரை அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினராக நியமித்ததன் விளைவு இதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முருகப்பெருமானை அவமதிக்கும் விதமாக முதல்வர் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரை கடவுளுக்கு இணையாகப் போற்றியதாகக் கூறி, பக்தர்களின் மனதைப் புண்படுத்திய வர்ணனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திமுக சமூக வலைதளப் பதிவில், இது மலிவான அரசியல் என்றும், முதல்வர் விஜய் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, வேல்முருகன் முதல்வர் விஜய், அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்கு ‘அரோகரா’ என முழக்கமிட்டது கண்டிக்கத்தக்கது என்றும், முதல்வர் கண்டனம் தெரிவிப்பதுடன் அறநிலையத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், பாரத இந்து முன்னணி மாநிலத் தலைவர் ஆர்.டி. பிரபு ஆகியோரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வேல்முருகன், புஷ்பவனம் குப்புசாமி மீது நடவடிக்கை கோரி பாரத இந்து முன்னணி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.