Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.25,000 கடனுக்காக இழந்த நிலத்தை மீட்ட பெண்

ரூ.25,000 கடனுக்காக இழந்த நிலத்தை மீட்ட பெண்

லாத்தூர், நவ. 22-
மகாராஷ்டிர மாநிலம், லாத்தூர் மாவட்டம், சாகூர் தாலுகா, கல்குட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முண்டுபாய் இரப்பா தாவ்ரே. இவர் தனது மகள் திருமணச் செலவுக்காக, கடந்த 1995-ம் ஆண்டு உள்ளூர் வட்டிக் கடைக்காரரிடம் 4.5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ரூ.25,000 கடன் பெற்றார். விளைச்சலைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறி அந்த நிலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த வட்டிக் கடைக்காரர், பின்னர் நிலத்தைப் போலியாகத் தனது பெயருக்கு விற்பனைப் பத்திரமாக மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு முண்டுபாய், ரூ.2.5 லட்சம் பணத்துடன் சென்று நிலத்தை மீட்க முயன்றார். அப்போது, வட்டித் தொகை ரூ.10 லட்சமாக உயர்ந்துவிட்டதாகக் கூறி, நிலத்தைத் திருப்பித் தர வட்டிக் கடைக்காரர் மறுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, குடும்பத்தினரின் உதவியுடன் முண்டுபாய் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார். இந்தப் புகார் தொடர்பாக லாத்தூர் மாவட்ட ஆட்சியர் பாரத் பஸ்தவாத், வட்டாட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அமோல் தம்பே ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், 1995-ம் ஆண்டு நிலம் தொடர்பாக மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நிலப் பதிவேடுகள் உடனடியாகத் திருத்தப்பட்டன. எந்தவிதக் கட்டணமும் இன்றி, 4.5 ஏக்கர் நிலம் மீண்டும் முண்டுபாய் இரப்பா தாவ்ரேவின் பெயருக்கு மாற்றப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நிலத்தை மீட்ட முண்டுபாய், இதற்கு உதவிய மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் உள்ளூர் வட்டாட்சியர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.