Home மாவட்டங்கள் சென்னை திருமாவளவன் பங்கேற்கவிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு

திருமாவளவன் பங்கேற்கவிருந்த பேரணிக்கு அனுமதி மறுப்பு

மதுரை: நவ. 23-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி, இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் கடந்த ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சிக்குச் சென்று தீபத்தூணை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அங்கு கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டார். எனினும், கடந்த ஆண்டு அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது. இந்த உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கார்த்திகை தினத்தன்று கடுமையான நிபந்தனைகளுடன் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியது. தீர்ப்புக்கு இந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்தன. அதேவேளையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதன்படி, தமிழக அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக மதுரையில் இன்று மாலை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் அமைதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். இந்தப் பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதேபோல், மதுரை கிரைம் பிராஞ்ச் சந்திப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தடையை மீறி பேரணி அல்லது போராட்டம் நடத்தினால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.