
பெங்களூரு: நவ. 24-
பெங்களூருவில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கவும், போக்குவரத்து போலீசார் சார்பில் சிறப்பு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 7 நாட்களாக, நகரின் அனைத்து போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைகளிலும் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில் மொத்தம் 42 ஆயிரத்து 68 வாகன ஓட்டிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின்போது, 744 பேர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 239 டிரைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சிறப்பு வாகனச் சோதனை தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் யாரும் வாகனம் ஓட்டக்கூடாது என்றும் அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.















