
புனே: நவ. 24-
புனேவில் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய 27 வயது பெண், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரது காதலனாகிய இன்போசிஸ் ஊழியரால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்ததாக கூறப்படும் நபர், இரவு முழுவதும் பெண்ணின் உடலுடன் தங்கியிருந்த பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்து சரணடைந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் வார்தா பகுதியைச் சேர்ந்தவர் கோமல் தஹாலே (27). இவர் புனேவில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். புல்தானா பகுதியைச் சேர்ந்த சுபம், புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒரே நகரில் பணியாற்றிய இருவருக்கும், டேட்டிங் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து டேட்டிங் சென்ற அவர்கள், பின்னர் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் குறித்து இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்திருந்த நிலையில், விரைவில் திருமணம் செய்ய இருவரும் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில், ஹிஞ்சவாடியில் கோமல் தங்கியிருந்த பி.ஜி. அறைக்கு சுபம் இரவு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சுபம், கோமலின் முகம், கழுத்து மற்றும் தலையில் பலமாக உதைத்து, மிதித்து தாக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.பின்னர் இரவு முழுவதும் கோமலின் உடலுடன் அந்த அறையிலேயே இருந்த சுபம், மறுநாள் காலை ஹிஞ்சவாடி போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்து சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து, கோமலின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.முதற்கட்ட விசாரணையில், சுபம் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக கோமல் சந்தேகித்ததும், இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். சம்பவத்தன்றும் இது குறித்து கோமல் கேட்டதால், சுபம் தாக்கியதாக அவரது வாக்குமூலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.புனே மண்டலம்-2 துணை காவல் ஆணையர் பிரதீப் ஜாதவ் கூறுகையில், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நெருங்கிய காதல் உறவில் இருந்ததாகவும், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகப் பிரச்சினையால் கொலை நடந்ததாகவும் தெரிவித்தார் சுபம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.













