
திருவண்ணாமலை, நவ. 24:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் இன்று அதிகாலை ஏற்றப்பட்டது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரணி தீபம், இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி கருவறைக்கு எதிரில் ஏற்றப்பட்டது.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் சிவபெருமான் ஒருவனே என்பதை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பரணி தீப தரிசனத்தின்போது பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷம் எழுப்பினர். பக்தி முழக்கங்களுடன் அவர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில், இன்று மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட உள்ள மகா தீபத்தை தரிசிக்க பக்தர்கள் தொடர்ந்து திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் சன்னதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரங்களில் ஜொலித்து வருகிறது. பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து, கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மாலை நடைபெற உள்ள மகா தீப நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பும் பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது.
















