
சென்னை, நவ. 26-
தமிழ்நாடு பொது நூலகங்களுக்கு போலி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்பட்ட மற்றும் தரமற்ற புத்தகங்கள் வாங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை என தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிப் புத்தகங்களைப் பார்த்து, “இவை வெறும் குப்பைகள்; உண்மைக்குப் புறம்பான தகவல்கள் கொண்டவை” என்று வேதனை தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் இருப்பது “அப்பட்டமான அரசியலமைப்புத் தோல்வி” என்றும் அவர் குறிப்பிட்டார்.கடந்த தீபாவளியின்போது கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்துக்குச் சென்ற எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்கிருந்த புத்தகங்களில் முறைகேடு இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட மாநில நூலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பொருளாதார அறிஞர் ஜீன் டிரேஸ், மகாகவி பாரதியார் ஆகியோரின் பெயர்களில் போலியாக உருவாக்கப்பட்ட புத்தகங்கள், இணையத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட கட்டுரைகள், ஏ.ஐ. மூலம் எழுதப்பட்ட அர்த்தமற்ற நூல்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பீனிக்ஸ் பதிப்பகம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து ஒரு புத்தகம் சுமார் ரூ.1,645-க்கு வாங்கப்பட்டதாகவும், அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பிலான 1,700 சர்ச்சைக்குரிய புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2024 ஜூனில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆன்லைன் கொள்முதல் விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய மதுரை கிளை உத்தரவிட்டது.
பதிப்பகங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.22.2 லட்சம் முடக்கப்பட்டது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பி. சந்திரமோகன், எஸ். ஜெயந்தி, எம். ஆர்த்தி ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பதிப்பாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். இ. பரந்தாமன் தொடர்ந்த வழக்கில், கடந்த 20 ஆண்டுகளின் கொள்முதல் ஆவணங்களை ஆய்வு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை கண்காணிக்க மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜி. வெங்கட்ராமனை நீதிபதி நியமித்தார்.













