
சென்னை, நவ. 26-
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. 1949-ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 1950 ஜனவரி 26-ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பல நூற்றாண்டுகளாகச் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருந்த இந்தியாவில், சமத்துவத்தை உறுதிசெய்து சமூகநீதிக்கு அடித்தளமிட்ட முற்போக்கான அரசியலமைப்புச் சட்டத்தை 1949-ஆம் ஆண்டு இதே நாளில்தான் நாம் ஏற்றுக்கொண்டோம். காலந்தோறும் மாறிவரும் சமூகத்தின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப பரிணமிக்கும் உயிரோட்டமுள்ள ஆவணமாக நமது அரசியலமைப்புச் சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் உருவாக்கினார். குடியரசாக நமது பயணத்தில் 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தை விரிவான மறுஆய்வுக்கு உட்படுத்துவது இன்றியமையாததாகிறது. இந்த நோக்கத்துடன்தான் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய–மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை நமது திராவிட மாடல் அரசு அமைத்தது.













