
சிம்லா, நவ. 26-
ஹிமாசலப் பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டம் காகஸ் பகுதியில் உள்ள ‘அப்னா கர்’ முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 75 வயது கங்கையா லால், 63 வயது சபினா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தினரின் ஆதரவின்றி தவித்த இருவருக்கும் இந்த முதியோர் இல்லத்திலேயே திருமணம் நடைபெற்றது. ‘அப்னா கர்’ முதியோர் இல்லத்தை வழக்கறிஞர் பிரகாஷ் சந்த் பன்சால் நடத்தி வருகிறார். மாண்டி மாவட்டம் துனாக் கிராமத்தைச் சேர்ந்த கங்கையா லால், மனைவி இறந்த பிறகு தனது சொத்துகள் அனைத்தையும் சகோதரர்களுக்கு எழுதிக் கொடுத்ததாகவும், பின்னர் சகோதரர்கள் தன்னை கைவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 2022-ம் ஆண்டு அவர் குகையில் வசித்து வந்த நிலையில், மீட்கப்பட்டு முதியோர் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார். கொல்கத்தாவைச் சேர்ந்த சபினா, வழிதவறி ஹிமாசலப் பிரதேசத்துக்கு வந்து தவித்துள்ளார். அவரைத் தேடி குடும்பத்தினர் யாரும் வராத நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு முதியோர் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டார். ஒரே இல்லத்தில் வசித்ததால் கங்கையா லால், சபினா ஆகியோருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்து பேசிய இருவரும் நல்ல நண்பர்களாகினர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. குடும்பத்தினரின் பாசம் கிடைக்காத நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ முடிவு செய்து, இதுகுறித்து இல்ல நிர்வாகத்திடம் தெரிவித்தனர். நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தது. நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற திருமணச் சடங்கில் இருவரும் மஞ்சள் நிற உடை அணிந்திருந்தனர். இந்து முறைப்படி மாலை மாற்றிக் கொண்ட அவர்கள், அக்னியை 7 முறை சுற்றி வந்து திருமணம் செய்து கொண்டனர். இல்லத்தைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், பிலாஸ்பூர் கலெக்டர் கிரண் பாதனா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.















