
காசியாபாத், நவ. 26-
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ரூ.2 கோடி ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக கணவரின் உணவில் ஈய நச்சை கலந்து கொல்ல முயன்றதாக ரேணு பட்நகர் கைது செய்யப்பட்டுள்ளார். கணவர் மட்டுமின்றி, மகன் மற்றும் உறவினருக்கும் இதேபோல் நச்சு கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 12 வயது மகள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த சுஷில் பட்நகர் டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். அவரது தொழிலின் மதிப்பு ரூ.5 முதல் ரூ.6 கோடி வரை இருப்பதாகக் கூறப்படுகிறது. சுஷில்–ரேணு தம்பதிக்கு 16 வயது மகனும், 12 வயது மகளும் உள்ளனர். திருமணமாகி சுமார் 18 ஆண்டுகள் ஆகின்றன. சுஷில் எடுத்திருந்த ரூ.2 கோடி ஆயுள் காப்பீட்டில் ரேணு நாமினியாக இருந்துள்ளார். கடந்த ஓராண்டாக சுஷிலுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 2025 ஆகஸ்ட் 21-ல் மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவரது உடலில் அளவுக்கு அதிகமாக ஈயம் இருப்பது தெரியவந்தது. ஈய நச்சு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காசியாபாத்திலுள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். சுஷில் சில காலம் மனைவியைப் பிரிந்து தனியாக இருந்தபோது, அவரது உடலில் ஈயத்தின் அளவு குறைந்தது.
இதனால் ரேணு மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது, “அம்மா சாப்பாடு போடுவதற்கு முன்பு அதில் ஏதோ ஒன்றை ஸ்பிரே செய்வதை நான் பார்த்திருக்கிறேன். தனக்கான உணவைத் தனியாக வைத்துவிட்டு,
மற்றவர்களின் உணவில் அதைச் செய்வார்” என்று மகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.















