
மதுரை: நவம்பர் 26-
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தத் தவறியதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மதுரை காவல் ஆணையர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக ராம ரவிக்குமார், வி.ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத் அமைப்பு உள்ளிட்டோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு முன்பு, ராம ரவிக்குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமாரும்,
இந்து தர்ம பரிஷத் அமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஜெய் சுகினும் முறையிட்டனர். அப்போது, “உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு திட்டமிட்டே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை. உயர்நீதிமன்றத்திலும் தீபம் ஏற்றுவோம் என இறுதிவரை தெரிவித்துவிட்டு, உத்தரவை முறைப்படுத்தவில்லை” என்று குற்றம்சாட்டினர்.
இதற்கு நீதிபதிகள், “உச்சநீதிமன்ற உத்தரவைக் கடைப்பிடிக்காதது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அதனைப் பரிசீலிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி கார்த்திகேயன் அழகர்சாமி புதிய இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். கார்த்திகை திருநாள் முடிந்துவிட்டது என்ற காரணத்தைக் காட்டி தீபம் ஏற்றாமல் இருப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும், காலம் கடந்தாலும் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் .என மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் முறையிட்டார். மனுவின் சாராம்சத்தைப் பார்த்த பிறகு விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.













