Home மாவட்டங்கள் சென்னை டிச. 2-ல் 85 மாவட்டங்களில் அதிமுக போராட்டம்

டிச. 2-ல் 85 மாவட்டங்களில் அதிமுக போராட்டம்

சென்னை: நவ. 26-
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, மேகதாது அணை விவகாரத்தில் த.வெ.க. அரசு மவுனம் காப்பது ஆகியவற்றைக் கண்டித்து,
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும் 85 மாவட்டங்களில் டிசம்பர் 2-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழ்நாடு பின்னோக்கி இழுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதன் காரணமாக மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பா சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதும், கடைமடை வரை நீர் சென்றடையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், போதைப் பொருள் பறிமுதல், கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதுடன், மின் கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தொடர் மின்வெட்டால் மக்கள் சிரமப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளான ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை ஆகியவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.டிசம்பர் 2-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் போராட்டங்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையிலும் நடைபெறும். கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.