
புதுதில்லி, நவ. 26:
1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு நிர்ணய சபை இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. நவீன அரசியலமைப்பை உருவாக்கியபோது, இந்தியாவின் செழுமையான மரபுகள் மற்றும் நாகரிக அறிவாற்றலிலிருந்து அது விரிவாகப் பெற்றுக்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு நிர்ணய சபையின் அனைத்து உறுப்பினர்களையும் இந்நாளில் நினைவுகூருவதாக அவர் கூறியுள்ளார். குடிமக்களின், குறிப்பாக இளைஞர்களின் மனதில் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை ஆழமாகப் பதியச் செய்யும் நோக்கில், நவம்பர் 26-ம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அரசியலமைப்பு பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கிறது. ஒருவர் பிறக்கும் சூழ்நிலைகள் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதை அது உறுதி செய்கிறது. சமூக, பொருளாதார நீதியை நிலைநாட்டும் அதன் தொலைநோக்குப் பார்வை, பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா, ஆயுஷ்மான் பாரத், முத்ரா, பிரதமரின் ஸ்வநிதி திட்டங்கள் மற்றும் யுபிஐ உள்ளிட்ட முன்முயற்சிகள் மூலம் நனவாகி வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக குடிமக்களின் கடமைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டியவர்களே அதை பலவீனப்படுத்த முயன்ற நிகழ்வுகளும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக, குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில், நக்சலைட்டுகள் துப்பாக்கிப் பலத்தைப் பயன்படுத்தி மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மறுத்து வந்ததாகவும், இந்த ஆண்டு நக்சலிசம் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டிருப்பது மனநிறைவை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.















