
தென்காசி: நவ. 26-
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, குற்றாலம் அருவிகளுக்கு வரும் நீரின் அளவு வேகமாக அதிகரித்தது. நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்ததால், அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து, பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது. இதனால், இன்று வியாழக்கிழமை காலை முதல் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க போலீசார் மற்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில் குளிக்க வந்தவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அருவிக்கரைப் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். நீர்வரத்து சீரான பிறகே மெயின் அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.













