Home செய்திகள் தேசிய செய்திகள் மூன்று வந்தே பாரத் ரெயில்களில் உயர்தர உணவு

மூன்று வந்தே பாரத் ரெயில்களில் உயர்தர உணவு

புதுடெல்லி: நவ. 27-
விமானப் பயணங்களில் வழங்கப்படுவதைப் போன்ற உயர்தர உணவு வழங்கும் முறை, நாடு முழுவதும் இயக்கப்படும் 3 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய உணவு முறையை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) செயல்படுத்தியுள்ளது.
மும்பை–பெங்களூரு, ஹவுரா–காமாக்யா, டெல்லி–வாராணசி ஆகிய 3 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் வழித்தடங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விமானங்களில் வழங்கப்படும் உணவைப் போன்ற வகைகள் மற்றும் தரத்தைப் பின்பற்றி பயணிகளுக்கு உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், காமாக்யா வழித்தடத்துக்கான உணவு விநியோகத்துக்கு மேபேர் குழுமத்துடனும், ஹவுரா வழித்தடத்துக்கான உணவு விநியோகத்துக்கு தாஜ் சாட்டஸ் நிறுவனத்துடனும், மும்பை வழித்தடத்துக்கான உணவு விநியோகத்துக்கு சரோவர் போர்டிகோ குழுமத்துடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், விமான நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பிரத்யேக சமையல் மையங்களும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.மும்பை–பெங்களூரு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களில் காலை உணவாக, சட்னி மற்றும் சாம்பாருடன் இட்லி, வடை, அவல் அல்லது உப்புமா ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகை வழங்கப்படும். மதிய உணவு மற்றும் இரவு உணவில் சப்பாத்தி, சாதம், பருப்பு ஆகியவற்றுடன் சிக்கன் அல்லது சைவ உணவு வகைகளில் ஏதேனும் ஒன்று இடம்பெறும்.இதனிடையே, ஒரு வேளை உணவின் மொத்த எடை 750 கிராமிலிருந்து 500 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய உணவு முறையில், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் வகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.