
புதுடெல்லி: நவ. 27-
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் எந்தவித கட்டுமானப் பணிகளுக்கும் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டுமானப் பணிகள் முழுமையாகத் தடைபட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து ‘கிரெடாய்’ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பான விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு ‘கிரெடாய்’ உள்ளிட்ட மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறுக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், சதுப்பு நிலத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான பணிகளை விரைவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் எனும் நிலையில், தன் தரப்பு வாதத்தையும் கேட்ட பின்னரே வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சவுமியா தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டும் என்பதே கேவியட் மனுவின் நோக்கமாகும்.













