
கடலூர்/நாமக்கல்: நவ. 27-
கடலூர் மாவட்டம் தியாகவல்லி, நொச்சிக்காடு, தம்மனாம்பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் உள்ள வளர்ப்புக்கோழி பண்ணைகளில் கடந்த அக்டோபர் மாத இறுதி வாரத்தில் கோழிகள் மர்ம நோயால் கொத்துக்கொத்தாக உயிரிழந்தன. கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இறந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் வரையிலான பண்ணையில் உள்ள 40 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டன. புதிய கோழிகள் வளர்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே கடலூர் அடுத்த நொச்சிக்காடு மற்றும் நடுத்திட்டு பகுதியில் உள்ள கோழி பண்ணைகளில் இருந்த ஏராளமான கோழிகள் நேற்று முன்தினம் உயிரிழந்தன. இதுபற்றி அறிந்த கடலூர் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேற்று காலை அந்த பண்ணைகளுக்கு சென்றனர். உயிரிழந்த கோழிகளில் இருந்து மாதிரிகள் சேகரித்து, அவை பறவை காய்ச்சல் பாதிப்பால் இறந்தனவா என ஆய்வு செய்வதற்காக நாமக்கல்லில் உள்ள நோய் கண்டறியும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் 2 பண்ணைகளில் இருந்த கோழிகளையும் உயிருடன் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பண்ணைகளின் அருகில் பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த பள்ளத்தில் கோழிகள் அனைத்தும் உயிருடன் போடப்பட்டு, அதன் மேல் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு புதைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநரிடம் விளக்கம் பெற முயற்சித்தபோது அவர் போனை எடுக்கவில்லை.
நாமக்கல்லில் முன்னெச்சரிக்கை: நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பண்ணைகளுக்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
பண்ணைத் தொழிலாளர்கள் கிருமிநாசினி நிரப்பப்பட்ட தொட்டியில் கால்களை நனைத்த பின்னரே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பண்ணை வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகளிலும் பண்ணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.













