Home செய்திகள் தேசிய செய்திகள் அருணாச்சலத்தை ‘தெற்கு திபெத்’ என சீனா குறிப்பிட்டது

அருணாச்சலத்தை ‘தெற்கு திபெத்’ என சீனா குறிப்பிட்டது

அருணாச்சலப் பிரதேசம்: நவ. 27-
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை ‘ஜாங்னான்’ அல்லது ‘தெற்கு திபெத்’ எனக் குறிப்பிட்டு சீனா மீண்டும் உரிமை கோரியுள்ளது. இரு நாடுகளின் ராணுவத் தளபதிகள் எல்லைப் பதற்றத்தைத் தணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, சீனா இந்தப் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சென் ஷியை மேற்கோள் காட்டி, சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா–சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் கிழக்குப் பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்காக, இரு நாட்டு ராணுவத் தளபதிகள் 10 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதியைப் பேணுதல், உள்ளூர் அளவிலான மோதல்களைத் தவிர்த்தல் மற்றும் இரு நாட்டு படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. கடுமையான குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இரு நாடுகளும் உரிமை கோரும் பகுதிகளில் ராணுவ ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, அவை பெரும்பாலும் மோதல்களுக்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது. தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நிறைவடைந்த சில தினங்களிலேயே சீனா மீண்டும் இந்தியாவைச் சீண்டும் வகையில் இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. ‘ஜாங்னான்’ பகுதி சீனாவின் ஓர் அங்கம் என்றும், இந்தியா நிறுவியதாக சீனா கூறும் ‘அருணாச்சலப் பிரதேசம்’ என்ற பகுதியை அங்கீகரிக்கவில்லை என்றும் சீனா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்தக் கூற்றுகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும். இடங்களுக்குப் பெயர் மாற்றுவதால் யதார்த்தத்தை மாற்ற முடியாது என்றும் இந்தியா கூறியுள்ளது.