
புதுடில்லி: நவ. 27-
லோக் சபாவின் சிறப்பு அமர்வு நவம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய பார்லி விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த அமர்வில், தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமர்வில் போதிய ஆதரவு இல்லாததால், இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை. மொத்தம் 543 உறுப்பினர்களைக் கொண்ட லோக் சபாவில், மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவாக 361 வாக்குகள் தேவை. தற்போது 3 இடங்கள் காலியாக இருப்பதால், லோக் சபாவில் 540 உறுப்பினர்கள் உள்ளனர்.
திரிணமூல் காங்கிரசைச் சேர்ந்த 20 அதிருப்தி எம்.பி.க்களும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையைச் சேர்ந்த 6 எம்.பி.க்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகளின் பலம் குறைந்துள்ளது. தற்போது 320 எம்.பி.க்கள் உள்ள நிலையில், 361 என்ற இலக்கை எட்ட எதிர்க்கட்சிகளின் கூடுதல் ஆதரவு தேவைப்படுகிறது.
22 எம்.பி.க்களைக் கொண்ட தி.மு.க.வும், 8 எம்.பி.க்களைக் கொண்ட சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் இன்று மதியம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தவறாமல் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. லோக் சபாவில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை நிறைவேற்றுவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதனிடையே, காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அக்கட்சியின் பார்லி குழுத் தலைவர் சோனியா காந்தியும் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். டில்லியில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் சிறப்பு அமர்வுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த அமர்வில் எதிர்க்கட்சிகளின் அமளியால் எந்த அலுவல் பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













