Home மாவட்டங்கள் பெங்களூர் ஒற்றை யானையைப் பிடிக்க 6 கும்கி யானைகள் வருகை

ஒற்றை யானையைப் பிடிக்க 6 கும்கி யானைகள் வருகை

சிக்கமகளூர், நவ. 27-
சிக்கமகளூரு மாவட்டத்தில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பீதியில் உள்ளனர். ஒருபுறம் காட்டு யானைகள் புகுந்து விவசாயப் பயிர்களை நாசம் செய்து வரும் நிலையில், மறுபுறம் காட்டெருமைகளின் தொல்லையால் காபி தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, சிக்கமகளூரு நகரின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் தயாராகியுள்ளனர். இதற்காக பேலூரில் இருந்து 6 கும்கி யானைகள் லாரிகள் மூலம் சிக்கமகளூருவுக்கு அழைத்து வரப்பட்டு, மத்தாவரா நர்சரி பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (இன்று) முதல் யானையைப் பிடிக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சிக்கமகளூரு நகரின் மத்தாவரா, இந்தாவரா, உப்பள்ளி, பழைய உப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் யானை நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த யானையைப் பிடித்து மக்களின் பயத்தைப் போக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பயிர்கள் நாசம்:
இன்னொருபுறம், மூடிகெரே தாலுகா கார்பைல் கிராமத்தில் காட்டு யானைகள் கூட்டம் புகுந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தியது. பிரகலாத் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் பயிர்களை மிதித்து நாசமாக்கின. வாழ்வாதாரமாக இருந்த தோட்டம் அழிந்ததைக் கண்ட விவசாயி பிரகலாத், தோட்டத்திலேயே அமர்ந்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல், நாகலாபுரா கிராமத்தைச் சேர்ந்த சுப்ரீத் என்பவருக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நெல் வயலிலும் யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. பல மாதங்களாகக் கஷ்டப்பட்டு வளர்த்த நெற்பயிர் அழிந்ததால் விவசாயிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
காட்டெருமைகள் தொல்லை:
சிக்கமகளூரு தாலுகா ஆல்தூர் ஹோபளி கஞ்சினகல் துர்கா கிராமத்தில் உள்ள காபி எஸ்டேட்டுகளில் காட்டெருமைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட காட்டெருமைகள் தோட்டங்களில் சுற்றித் திரிவதால் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லவே அஞ்சுகின்றனர்.
மாவட்டத்தில் காட்டு யானைகள் மற்றும் காட்டெருமைகளின் தொல்லையால் மலைநாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, காட்டு விலங்குகளின் அட்டகாசத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மக்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும வலியுறுத்தினர்