Home செய்திகள் உலக செய்திகள் அணு ஆயுதத் தாக்குதல் குறித்து ரஷ்யா எச்சரிக்கை

அணு ஆயுதத் தாக்குதல் குறித்து ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: நவ. 26-
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க நேரிடும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் முன்னாள் அதிபரான டிமிட்ரி மெத்வதேவ், விளாடிமிர் புதின் தலைமையிலான அரசில் பிரதமராகவும் பணியாற்றியவர். தற்போது ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக உள்ள அவர், ‘மாஸ்கோ ஜர்னல் ஆஃப் இன்டர்நேஷனல் லா’ இதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.‘
நாட்டின் இறையாண்மை மற்றும் அணு ஆயுதங்கள்: தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சர்வதேச சட்ட அம்சங்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையில் மெத்வதேவ் கூறியிருப்பதாவது:
“உக்ரைனும், நேட்டோ அமைப்பின் தோழமை நாடுகளும் ஏற்கெனவே சில எல்லைகளைக் கடந்துவிட்டன. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதம் அல்லாத வழிமுறைகளை அவை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை அடிப்படையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து ரஷ்யா பரிசீலிக்கும் நிலைக்கு தள்ளக்கூடும்.
மேற்கத்திய நாடுகள் கீவ் நகருக்கு மறைமுகமாக அணு ஆயுதங்களை வழங்கினால், நாங்களும் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலிப்போம். ரஷ்யாவுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை மட்டுமல்ல; அதற்கான கடமையும் உள்ளது.
”இவ்வாறு அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா அணு ஆயுதம் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள் ஒன்றை ஏவத் தயாராகி
வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மெத்வதேவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ‘ஸ்புட்னிக்-எஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த அணு ஆயுத செயற்கைக்கோள், பிற செயற்கைக்கோள்களை முடக்க அல்லது அழிக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.இதற்கிடையே, ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ரஷ்ய தூதரகம், இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்துள்ளது.