Home செய்திகள் தேசிய செய்திகள் உச்சநீதிமன்றம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி

உச்சநீதிமன்றம் நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி

புதுடில்லி, அக். 12-
தேர்தல் கமிஷன் மற்றும் வாக்குப்பதிவு விவகாரங்களை முன்னிறுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி, உச்சநீதிமன்றத்தை நோக்கி இன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, மத்திய டில்லி பகுதியில் உள்ள 6 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வழக்கமான அலுவலகப் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ‘இண்டி’ கூட்டணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்தப் பேரணியில், மதியம் கன்னாட் பிளேஸ்–பாராகம்பா சாலை சந்திப்பில் எதிர்க்கட்சியினர் ஒன்று கூடி, அங்கிருந்து உச்சநீதிமன்றத்தை நோக்கிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் பெருமளவில் கூடுவதைத் தடுக்கும் வகையிலும், சட்டம்–ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும் டில்லி போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மத்திய டில்லி வழித்தடத்தில் உள்ள 6 முக்கிய மெட்ரோ நிலையங்களில் பயணிகள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் உள்ள வாயில்கள் மூடப்பட்டுள்ளன. அந்த நிலையங்களில் மெட்ரோ சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், ரயில் மாறுவதற்கான இணைப்பு வசதிகள் மட்டும் வழக்கம்போல் செயல்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை காலை வேலைக்குச் சென்றவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் மாற்று வழித்தடங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. மத்திய டில்லிக்கு வருவோர், இந்தப் பயணக் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரணியை முன்னிட்டு டில்லி முழுவதும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.