Home செய்திகள் தேசிய செய்திகள் நவ.1 டெல்லி பேரணிக்கு ராகுல் அழைப்பு

நவ.1 டெல்லி பேரணிக்கு ராகுல் அழைப்பு

புதுடெல்லி: அக். 30-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் பொதுமக்களும் மாணவர் அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“இது எந்த அரசியல் கட்சிக்காகவும் நடத்தப்படும் பேரணி அல்ல; இந்தியாவின் ஆன்மாவுக்காக நடத்தப்படும் பேரணி. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரால் விரக்தியடைந்த அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும். “ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் விரும்பும் அனைவரும் பேரணியில் கலந்து கொள்ளுங்கள். இது நாட்டுக்காக நடத்தப்படும் ஒரே போராட்டம். அரசியலமைப்பையும் இந்திய தேசத்தையும் பாதுகாக்க நாம் ஒன்றாக நடப்போம். “அரசியல் சார்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாணவர் அமைப்புகளும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தியா தாக்குதலுக்குள்ளாகிறது என்றும், தங்களது கருத்து வெளிப்பாடு, சிந்தனை, எண்ணங்கள் ஆபத்தில் உள்ளன என்றும் நீங்கள் உணர்ந்தால், எங்களுடன் இணையுங்கள். “இது நாட்டின் ஆன்மாவுக்கான மிக முக்கியமான பேரணியாக இருக்கும். உங்களை அங்கு சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். எதற்கும் அஞ்சத் தேவையில்லை. காவல் துறை அல்லது தடியடி குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. பாஜகவுக்கு தனது வழக்கமான தந்திரங்களை மேற்கொள்ளும் துணிவு இருக்காது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.