
பெங்களூரு, செப். 26-
தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 4 ஆயிரம் கன அடி காவிரி நீரைத் திறக்க உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகத்தில் நிகழாண்டில் பருவமழை பொய்த்ததால், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில்,
தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 4 ஆயிரம் கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த உத்தரவுக்கு கர்நாடகாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து நேற்று மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம்.
கர்நாடக அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. வறட்சி காரணமாக கர்நாடக விவசாயிகளுக்கு நீர் திறக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, இந்த உத்தரவை எதிர்த்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்’’ என்றார். கர்நாடக அரசின் இந்த முடிவு, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிரானதாகும்.














