
புதுடெல்லி, அக். 17-
பா.ஜ. மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி (98), திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பா.ஜ.வை அடிமட்டத்திலிருந்து தேசிய அளவில் வலுவான அமைப்பாகக் கட்டியெழுப்புவதில் அத்வானி முக்கியப் பங்காற்றியவர். 98 வயதான அவர், தீவிர அரசியலில் இருந்து விலகி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை அவருக்கு லேசான மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சில் சளி தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவு 7.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்குள்ள நுரையீரல் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்வானியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தன.













