மருத்துவமனையில் தீ விபத்து 10 நோயாளிகள் சாவு

போபால்,ஆக.1 மத்திய பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போபால், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள கோஹல்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மல்டி ஸ்பெலாட்டி தனியார் ஆஸ்பத்திரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்துள்ள பலர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏராளமானோர் இந்த தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்ததில் அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேரில் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.