
சென்னை, அக். 9-
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் திமுக அரசின் பங்களிப்பை வரலாறு எப்போதும் நினைவில் கொள்ளும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ திட்டம், கருணாநிதி ஆட்சிக் காலத்தில், தான் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இரண்டாம் கட்டப் பணிகள் தாமதமடைந்தன. 2021-ல் திமுக அரசு பொறுப்பேற்றதும், அந்தப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. மத்திய அரசின் பங்களிப்பு நிதி 3 ஆண்டுகளுக்கும் மேலாக விடுவிக்கப்படாத நிலையிலும், கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையே மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து ரூ.11,762 கோடியும், வெளிநாட்டு கடனுதவி மூலம் ரூ.6,802 கோடியும் செலவிடப்பட்டன.
மொத்தம் ரூ.18,564 கோடி செலவில் பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டன. 2024 அக்டோபரில் திமுக அரசின் கோரிக்கை ஏற்கப்பட்டு, மத்திய அரசின் நிதி ஒப்புதல் பெறப்பட்டது. இந்த வழித்தடத்தை 2025 இறுதிக்குள் திறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சிக்னல் அமைப்புக்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தாலும், அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாலும், திட்டமிட்டபடி வழித்தடத்தைத் திறக்க முடியாமல் போனது.ஆண்டுக் கணக்கில் தான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ ரயில் என்ற குழந்தை அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்வதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.














